சேலத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சேலத்தில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சூரமங்கலம்:
சேலத்தில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
சேலம் சித்தனூர் பால்பண்ணை அருகே தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த மையத்தின் ஷட்டர் திறந்திருக்கும். இரவு ரோந்து போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பாதுகாப்பை உறுதி செய்துவிட்ட பிறகு அங்கிருக்கும் போலீஸ் புத்தகத்தில் கையெழுத்திடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் இரும்பாலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் அங்கு சென்றார். ஆனால் அங்கு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அந்த ஷட்டரை திறந்தார். அப்போது அங்கு கொள்ளையன் ஒருவன் ஆயுதங்களை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் அந்த நபரை பிடிக்க முயன்றார்.
கீழே தள்ளிவிட்டு தப்பினான்
ஆனால் கொள்ளையன் அங்கிருந்த கதவின் கண்ணாடியை உடைத்து கொண்டதுடன் தனசேகரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பூபதிராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ஏ.டி.எம். மையத்தை போலீசார் பார்வையிட்ட போது, உருவம் பதிவாகாமல் இருப்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவுக்கு கருப்பு கலர் பெயிண்டு அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கு கொள்ளையன் கொண்டு வந்த வெல்டிங கட்டர், கத்தி, மிளகாய் பொடி உள்ளிட்டவை இருந்தது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை எடுக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது. இதையடுத்து தப்பி ஓடிய கொள்ளையனை பிடிக்க அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்லமூப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பட்டதாரி வாலிபர் கைது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொள்ளையனின் பெயர் முகுந்தன் (வயது25) என்பதும் பி.எஸ்சி. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறினார். இந்த கடனை அடைப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க அவர் முயன்றுள்ளார். இதையடுத்து முகுந்தனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story