பெரம்பலூா் கலெக்டா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அன்னமங்கலம் ஏரிக்கு விசுவக்குடி அணையில் இருந்து தண்ணீர் வரத்துக்கான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெரம்பலூா் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிக்கு கல்லாற்றில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் உள்ளது. விசுவக்குடி அணை கட்டிய பிறகு இந்த வரத்து வாய்க்கால் தூர் வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. எனவே வரத்து வாய்க்காலை சீரமைத்து அன்னமங்கலம் ஏரிக்கு விசுவக்குடி அணையில் இருந்து தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் விசுவக்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறக்க கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சென்றபோது, அவரை மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அன்னமங்கலம் கிராம விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஏற்கனவே வரத்து வாய்க்கால் இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்து தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்னமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளில் சிலர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை தொடர்பாக பேசினர். அவர் இதுகுறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story