முதுமலை-மசினகுடி சாலையில் புலிகள் நடமாட்டம்; வனத்துறை எச்சரிக்கை
முதுமலை மசினகுடி சாலையில் புலிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள், புலிகள், செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் கூடலூரில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காடு-மசினகுடி வழியாக ஊட்டிக்கு செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.
மேலும் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக பாய்ந்தோடும் மாயாற்றில் காலை மற்றும் மாலை வேளைகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக அதிக அளவு வந்து செல்கின்றன. இதனால் மேற்கண்ட இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
இதனால் முதுமலை-மசினகுடி சாலை மற்றும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையோரம் நடமாடும் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
பெரும்பாலும் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் மட்டுமே சுற்றுலா பயணிகளின் கண்களில் தென்படும். இதை ஆர்வத்துடன் வாகனங்களில் இருந்தவாறு அனைத்து தரப்பினரும் கண்டு ரசித்து, தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் கரடி, சிறுத்தைப்புலிகள், புலிகள் ஆகியவற்றை காண்பது அரிதாகவே உள்ளது.
புலிகள் நடமாட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மசினகுடி மற்றும் சிங்காரா வனத்துறையினர் முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு ரோந்து வந்தனர். அப்போது முதுமலை- மசினகுடி சாலையோரம் புல்வெளியில் 2 புலிகள் அருகருகே படுத்து கிடந்ததை கண்டனர்.
உடனடியாக தங்களது செல்போன்களில் வனத்துறையினர் புலிகளை புகைப்படம் எடுத்தனர். இந்த சமயத்தில் வனத்துறையினரை கண்டதும் புலிகள் அங்கிருந்து விரைவாக புதருக்குள் சென்று மறைந்தது. பின்னர் அங்கிருந்து சென்றனர்.
வனத்துறையினர் எச்சரிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
முதுமலை சாலையோரம் காட்டு யானைகள், மான்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டுயானைகள் எளிதில் தாக்கும் குணம் கொண்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை முதுமலை சாலைகளில் நிறுத்தக்கூடாது.
தற்போது முதுமலை தெப்பக்காடு பகுதியில் புலிகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் இந்த விதிமுறை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story