திருப்பூர் பெருமாநல்லூரில் இளம்பெண் மர்ம சாவு குறித்து மீண்டும் விசாரணை; முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் சகோதரி மனு
பெருமாநல்லூரில் இளம்பெண் மர்மசாவு குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு சகோதரி மனு கொடுத்துள்ளார்.
இளம்பெண்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா இருப்புகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டினா மேரி (வயது 21). இவர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மகளிர் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 28-6-2020 அன்று கிறிஸ்டினா மேரி தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் கிறிஸ்டினா மேரி சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் பெருமாநல்லூர் அருகே நியூ திருப்பூரில் குடியிருந்து வரும் கிறிஸ்டினா மேரியின் சகோதரி பாஸ்கலா மேரி, சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று முதல்-அமைச்சரின் தனிப்பிவில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தமனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தலையில் காயம்
கடந்த 28-6-2020 அன்று எனது தங்கை கிறிஸ்டினா மேரி பணிபுரிந்த பனியன் நிறுவன மகளிர் விடுதியின் காப்பாளர் இரவு 7.25 மணிக்கு என்னை செல்போனில் அழைத்து உங்களது தங்கை தற்கொலை முயற்சி செய்து அபாய கட்டத்தில் உள்ளார். எனவே பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் என்றார். அங்கு சென்றால் உங்கள் தங்கை இறந்து 6 மணிநேரம் ஆகி விட்டது. நீங்கள் உங்கள் தங்கை பணியாற்றிய பனியன் நிறுவனத்திற்கு செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். அங்கு சென்றபோது எனது தங்கையின் உடலை ஆம்புலன்சில் தனியாக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விட்டதாக கூறி விட்டனர். உடனே அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு ஆம்புலன்சில் இருந்து எனது தங்கையின் உடலை இறக்கினார்கள். அப்போது எனது தங்கையின் தலையில் காயம் இருந்தது. மார்பில் ரத்தம் வந்தது. தலை வீங்கி இருந்தது.
மறுநாள் பெருமாநல்லூர் போலீஸ் நிலையம் சென்று, எனது தங்கையின் உடலில் உள்ள காயத்தை போலீசாரிடம் கூறினேன். ஆனால் போலீசார் அதை பதிவு செய்யவில்லை. பின்னர் 30-ந் தேதி என்னிடமும், எனது தாயார், அண்ணன், எனது கணவர் ஆகியோரிடம் போலீசார் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். அது எதற்காக வாங்கினார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பனியன் நிறுவன உரிமையாளர் ரூ.2 லட்சம் தருகிறேன் என்றார். ஆனால் எனது தங்கை எப்படிஇறந்தார் என்று கூறவில்லை. எனது தங்கையின் உடலை எனது அண்ணன் செல்போனில் போட்டா எடுத்தபோது அந்த போட்டாவை போலீசார் அழித்து விட்டனர்.
மீண்டும் விசாரிக்க வேண்டும்
இதற்கிடையில் பனியன் நிறுவன உரிமையாளர் அனுப்பியதாக வந்த ஒருவர், எங்களிடம் வந்து ரூ.2 லட்சம் ரொக்கமாகவும், ரூ.35 ஆயிரம் காசோலையாகவும் கொடுக்க சொன்னதாக கூறினார். அப்போது எனது தங்கை தீராத வயிற்று வலியால் இறந்ததாக கையெழுத்து வாங்க முயன்றனர். பின்னர் வற்புறுத்தி பணம் கொடுத்தனர்.
எனது தங்கையின் சாவை முறையாக புலன் விசாரணை செய்யாமல் வழக்கை போலீசார் முடித்ததாக தெரிகிறது. மேலும் எனது தங்கைக்கு 2 பேர் மன ரீதியாக தொல்லை கொடுப்பதாக அவர் அடிக்கடி கூறுவார். எனவே எனது தங்கைக்கு தொல்லை கொடுத்த 2பேர்தான் கொலை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பனியன் நிறுவனம் உடந்தையாக உள்ளது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது தங்கை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதை கண்டு பிடிக்க அடிப்படையாக உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் குறைபாடு இருப்பதால், எனது தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களிடம் இதுவரை போலீசார் விசாரணைநடத்த வில்லை. எனவே பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீ்ண்டும் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது. இதே மனுவை மனித உரிமை ஆணையம், மகளிர் உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story