புதிய பாதையை ஏற்கமாட்டோம்: தாராபுரத்தில் பழைய வழித்தடத்தில் மஞ்சுவிரட்டு; துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு
தாராபுரத்தில் மஞ்சுவிரட்டு நடத்த புதிய பாதையை ஏற்கமாட்டோம். பழைய பாதையில் மஞ்சு விரட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
தாராபுரம் தேவேந்திரர் தெரு பொதுமக்கள் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை 100 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறோம். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை தேவேந்திரர் தெருவில் தொடங்கி தாலுகா அலுவலகம், சின்னக்காளியம்மன் கோவில், பெரியகாளியம்மன் கோவில் சாலையில் சென்று அலங்கியம் சாலை சந்திப்பில் உள்ள இடுகாட்டில் முன்னோர் வழிபாடு நடத்துவோம்.
பின்னர் அங்கிருந்து திரும்பவும், அலங்கியம் சாலை, பொன்னுநிலையம், போலீஸ் நிலையம் வந்து தாலுகா அலுவலக சாலையில் மீண்டும் தேவேந்திரா தெரு வந்து விழா நிறைவு பெறும். அவ்வாறு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அடையாளமாக கொண்டாடி வருகிறோம்.
புதிய வழித்தடத்தை ஏற்கமாட்டோம்
அதே போல இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி மஞ்சு விரட்டு நடைபெற்றது. அப்போது மஞ்சுவிரட்டு தொடங்கிய இடத்தில் இருந்து காளைகளோடு பொதுமக்களும் வந்து கொண்டிருந்தோம். பெரிய காளியம்மன் கோவில் அருகில் வந்தபோது திடீரென சிலர் கல்லை வீசியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் வந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததன் பேரில் விழா முடிந்தது.
இதனை காரணம் காட்டி தென்தாரை பகுதியை சார்ந்த அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இனி மஞ்சு விரட்டு நடத்த மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்து தருவதாக பேசி முடித்ததாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இது முற்றிலும் பொதுமக்களின் எண்ணங்களை கேட்காமல் அரசியல் பிரமுகர்கள் எடுத்த முடிவு ஆகும். இதனை ஒரு போதும் நாங்கள் ஏற்க மாட்டோம். பலநூறு ஆண்டுகளாக நடைபெறும் விழா பாரம்பரியமும் பண்பாடும் உள்ள விழா. எனவே, தகுந்த பாதுகாப்போடு எங்களது பழைய வழித்தடத்திலேயே மஞ்சு விரட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story