பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா; இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தைப்பூச திருவிழா
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன்கோவில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவில்லை. மாறாக ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது.
கட்டுப்பாடுகள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும், அவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதோடு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்து கோவிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஒரு சில பக்தர்கள் அலகு குத்தியும், மயில்காவடி, பால்காவடி, தீர்த்தக்காவடி உள்ளிட்டவற்றை எடுத்தும் வருகின்றனர்.
ஆட்டம், பாட்டத்துடன்...
பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க இலவச தங்குமிடங்கள், மருத்துவ முகாம்கள், வெளிச்சத்துக்காக பாதையோரம் மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் விபத்தை தடுக்க பக்தர்களுக்கு போலீஸ் துறை சார்பில் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படுகின்றன. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் முன்பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதார் அட்டை மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள பழனிக்கு பாதயாத்திரையாக வரும், பக்தர்கள் களைப்பு தெரியாமல் இருக்க கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடிக் கொண்டும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்ற சரண கோஷம் எழுப்பியபடியும் வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளைகளில் அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. பக்தர்கள் சாமி தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பும்போது பஞ்சாமிர்தம், இனிப்புகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.தைப்பூசத்தையொட்டி பழனியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story