வாணியம்பாடி அருகே, எருது விடும் திருவிழா - மாடுகள் முட்டி 10 பேர் காயம்
வாணியம்பாடி அருகே எருது விடும் திருவிழா நடந்தது. அதில் மாடுகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பஸ் நிலையம் அருகில் மயிலார் விழாவையொட்டி எருது விடும் திருவிழா நடந்தது. ஊர் நாட்டார் அண்ணாமலை கவுண்டர், பாட்டில் ரவிராவ், தேசாய் கோகுல்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் என்.பி.செல்வம் வரவேற்றுப் பேசினார்.
எருது விடும் திருவிழாவை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
திருவிழாவில் வாணியம்பாடி, கொத்தக்கோட்டை, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 200 எருதுகள் கொண்டு வரப்பட்டு போட்டியில் பங்கேற்க வைத்தனர். ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டதும் எருதுகள் சீறிப்பாய்ந்து ஓடின.
அதில் வேகமாக ஓடிய ஒரு எருது நிலை தடுமாறி அங்கிருந்த ஒரு தனியார் கிணற்றில் விழுந்தது. அதை, தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர். எருதுகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.
குறிப்பிட்ட தூரத்தை மிகக் குறைந்த வினாடிகளில் ஓடி கடக்கும் எருதுகளுக்கு பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரி என்பவரின் எருது வேகமாக ஓடி முதல் பரிசாக ரூ.55 ஆயிரத்தை பெற்றது.
கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் எருதுக்கு 2-வது பரிசாக ரூ.44 ஆயிரம், வெள்ளகுட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் எருதுக்கு 3-வது பரிசாக ரூ.33 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 25 பரிசுகள் வழங்கப்பட்டன.
எருது விடும் திருவிழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story