4 மீனவர்கள் இறப்புக்கு நீதி கேட்டு கச்சத்தீவுக்கு நாளை மீனவர்கள் பயணம் - மற்றொரு போராட்டமும் அறிவிப்பு
4 மீனவர்களின் இறப்புக்கு நீதி கேட்டு நாளை கச்சத்தீவுக்கு பயணம் செய்யப்போவதாகவும், மற்றொரு போராட்டத்தையும் அறிவித்து உள்ளனர். இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நேற்று நடந்த மீனவர்கள் போராட்டத்தில் விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா பேசியதாவது:-
ராமேசுவரம்,
மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை பறிமுதல் செய்வதோடு மீனவர்களை சிறையில் அடைக்கும் சம்பவங்களும் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. அதிலும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருநாட்டு மீனவர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசுகிறார். அவரை வன்மையாக கண்டிக்கிறோம்.
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் வைத்து மோதி படகையும் மீனவர்களையும் கடலில் மூழ்கடித்துள்ளனர். மேலும் கடலில் மூழ்கிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அடித்து காயப்படுத்தி திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். மீனவர்களின் உடல்களை பார்க்கும் போது காயம் இருப்பது தெளிவாக தெரிகி்றது. ஆகவே 4 மீனவர்களை திட்டமிட்டு கொலை செய்த இலங்கை கடற்படை மீது மத்திய அரசு கொலை வழக்குப்பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கை மீனவர்கள் மீதும் படகுகள் மீதும் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை எந்த ஒரு தாக்குதலையும் நடத்தியது கிடையாது. ஆனால் இலங்கை கடற்படையினரோ தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது,, படகுகளை சேதப்படுத்துவது, மூழ்கடிப்பது, மீனவர்களை கொலை செய்வது என பல சம்பவங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். எனவே மத்திய-மாநில அரசுகள் இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகின்ற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்திற்கு எந்த ஒரு வாகனங்களும் வரமுடியாத அளவிற்கு தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் நடத்த முடிவு செய்துள்ளோம். 23-ந் தேதி (நாளை) ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகளில் ஏறி கச்சத்தீவு நோக்கி பயணம் செய்யும் போராட்டமும் திட்டமிட்டபடி நடைபெறும். எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை் போராட்டத்தை கைவிட மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story