படகை மூழ்கடிப்போம் என சொன்னதை இலங்கை கடற்படையினர் ஈவு, இரக்கமின்றி செய்து காட்டிவிட்டனர் - 2 நாட்களுக்கு முன்பு விடுதலையாகி வந்த மீனவர் திடுக்கிடும் தகவல்
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி வந்து, மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் ஜெனோபர். இவர் கடந்த 35 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் தவித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு விடுதலையாகி ராமேசுவரம் வந்த அவர் கூறியதாவது:-
ராமேசுவரம்,
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்தபோது 4 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் நான் உள்ளிட்ட மீனவர்கள் இருந்த படகை பறிமுதல் செய்தனர். அப்போது எங்களை கைது செய்து அழைத்துச் சென்ற அவர்கள், முட்டி போட வைத்து கிரிக்கெட் ஸ்டம்ப் மற்றும் இரும்பு குழாயால் கொடூரமாக தாக்கினார்கள். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை முகாமிலேயே எங்களை தங்க வைத்திருந்தனர். அங்கு எங்களை ஆடைகளை அவிழ்க்க செய்து, ஆடவைத்து செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற போது, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழக மீனவர்கள் அனைவரையும் கைவிலங்குடன், இரும்பு சங்கிலிகளால் கட்டி சாலையில் அடிமை போல் நடக்கச் செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்பு நீதிபதி, இலங்கை கடல் பகுதிக்குள் இனி மீன்பிடிக்க வந்தால் 10 ஆண்டு சிறை தண்டனை எனவும், படகு திரும்ப வழங்கப்படாது எனவும் கடுமையாக எச்சரித்தார்.
இனி தமிழக படகுகள் மீது கப்பலை வைத்து மோதி மூழ்கடிக்க செய்து விடுவோம் என இலங்கை கடற்படையினர் அப்போது எச்சரித்தனர். அவர்கள் சொன்னதை போன்று ஈவு, இரக்கமற்ற முறையில் இந்த கொடூர சம்பவத்தையும் அரங்கேற்றிவிட்டனர்.
இவ்வாறு அவர் வேதனையுடன் கூறினார்.
Related Tags :
Next Story