மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - மதுரையில் ஜவாஹிருல்லா பேட்டி
மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என மதுரையில் ஜவாஹிருல்லா கூறினார்.
மதுரை,
மனித நேய மக்கள் கட்சியின் தென் கிழக்கு மண்டல பொதுக்குழு கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.ம.மு.க. மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ்கான், ம.ம.க. முகமது கவுஸ், தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மக்கள் நலனில் ஒரு அக்கறை இல்லாத அரசு. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்கள் எல்லாம், மக்களின் நலனுக்கு விரோதமாக உள்ளது என்பதற்கு மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதனுடைய இணை தலைவராக இருக்கக்கூடிய எம்.பி. வெங்கடேசனுக்கு கூட தகவல் தராமல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதிகளில் நடந்து செல்லும் போது அங்குள்ள சாலைகள் எல்லாம் குண்டும், குழியுமாக கிடைப்பதை காணமுடிகிறது. இதுபோல், தான் மதுரையில் 14 இடங்களில் அரைகுறையாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறிக்கும் வகையில் தான் எடப்பாடி பழனிசாமி அரசு நடக்கிறது. இந்த அரசு மாறினால் தான் மக்களுக்கு நன்மை ஏற்படும்.
வருகிற 27-ந்தேதி சிறையில் இருந்து சசிகலா நடராஜன் வெளியே வருகிறார். அவர் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அவருடைய வருகை அ.தி.மு.க.- பா.ஜ.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே, இதில் சந்தேகம் வலுவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை கூட்டு சதி செய்து மத்திய அரசு பறிக்கிறது. தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளையும் மாநில அரசு கேட்டு பெறாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை என்பதை உண்மை. வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மதுரை எய்ம்ஸ் பணிகளை துரிதப்படுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story