தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த கோவில் சீரமைப்பு சாமி சிலைகள் மீண்டும் நிறுவப்பட்டன


தாமிரபரணி வெள்ளத்தில் சேதமடைந்த கோவில் சீரமைப்பு சாமி சிலைகள் மீண்டும் நிறுவப்பட்டன
x
தினத்தந்தி 23 Jan 2021 12:27 AM IST (Updated: 23 Jan 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சேதமடைந்த கோவிலை சீரமைக்கும் பணியில் பக்தர்கள் நேற்று ஈடுபட்டனர். வெள்ளத்தால் சாய்ந்த சாமி சிலைகள் கிரேன் உதவியுடன் மீண்டும் நிறுவப்பட்டன.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி, உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஆற்றுக்குள் இருந்த பல்வேறு சாமி சிலைகள், கோவில்கள் சேதம் அடைந்தன.

கோவில் சேதம்

நெல்லை மேலநத்தத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விநாயகர் சிலையை சமீபத்தில் எடுத்து மீண்டும் அதே இடத்தில் நிறுவி சுற்றுப்பகுதியை சீரமைத்தனர்.

இதேபோல் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றுக்குள் சுடலை மாடசாமி, கொம்பு மாடசாமி, முண்டசாமி, பேச்சியம்மன், பிரம்ம சக்தி, இசக்கி அம்மன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுக்கு கொட்டகை அமைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் கோவில் கொட்டகை முற்றிலும் பெயர்ந்து இருந்தது. மேலும் 5-க்கும் மேற்பட்ட சிலைகளும் தண்ணீருக்குள் சாய்ந்து கிடந்தன. அங்கிருந்த சிறிய பீடங்களும் உடைந்து சேதம் அடைந்தன.

மீண்டும் நிறுவப்பட்டன

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதையடுத்து நேற்று பக்தர்கள் கோவில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் எந்திரம் உதவியுடன் சாய்ந்து கிடந்த சாமி சிலைகளை தூக்கி மீண்டும் அதே இடத்தில் நிறுவினர். விரைவில் கோவில் வளாகத்தை முழுமையாக சீரமைத்து, வருகிற மாசி மாதம் கொடை விழா நடத்தப்போவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

மின்கம்பிகள் சேகரிப்பு

மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் 113 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மின்கம்பிகளும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் ஆற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதையடுத்து நேற்று குறுக்குத்துறை பகுதியில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களில் தொங்கிக்கொண்டிருந்த மின் கம்பிகள் மற்றும் ஆற்றில் மணலுக்குள் புதைந்து கிடந்த மின் கம்பிகளை மின் ஊழியர்கள் சேகரித்தனர். ஓரிரு நாட்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு புதிய மின் கம்பிகள் இணைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story