கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரட் வண்டியில் ஏறியதில் விதிமீறல்?
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வரவேற்பு நிகழ்ச்சியின் போது,, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரட் வண்டியில் ஏறியது ஏன்? என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் நடராஜன்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்த இவர், முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு வந்தார். அப்போது, ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து அவரது வீடு வரைக்கும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். செண்டை மேளம் முழங்க, பட்டாசு மற்றும் வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சாரட் வண்டி
பெங்களூருவில் இருந்துகாரில் வந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், உடனே சாரட் வண்டியில் அமர வைக்கப்பட்டார். அப்போது தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சில போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். ஆனால் நடராஜனுக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் சாரட் வண்டியில் ஏறி அவரும் அமர்ந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் சாரட் வண்டி ஊர்வலம் நடந்தது.
சிவக்குமார் கடைசி வரையில் சாரட் வண்டியில் இருந்து கீழே இறங்கவில்லை. ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள் ஒன்று கூடியதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சாரட் வண்டியில் ஏறிச்சென்றது ஏன்? என விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் உரிய பாதுகாப்பு இல்லாமல் கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் சாரட் வண்டியில் ஏறி அமர்ந்தது ஏன்? என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் சொந்த ஊர் கிரிக்கெட் வீரர் நடராஜனின் சொந்த ஊரான சின்னப்பம்பட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story