விழுப்புரத்தில் குடியரசு தினவிழா பாதுகாப்பு ஒத்திகை
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை யொட்டி போலீசாா் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
குடியரசு தின விழா
நாட்டின் 72-வது குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடியரசு தின விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் வரவழைத்து கவுரவிக்காமல் அவர்களது வீட்டிற்கே சென்று கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு குடியரசு தின விழாவை குறைந்த அளவில் அரசு அதிகாரிகளை கொண்டு எளிமையான முறையில் நடத்தவும், குறைந்த அளவில் போலீசாரை கொண்டு அணிவகுப்பு மரியாதை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஒத்திகை
இதையொட்டி விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த அணிவகுப்பு ஒத்திகையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் 25 போலீசார் மட்டுமே கலந்துகொண்டு பேண்ட் வாத்தியம் இசைக்கேற்றவாறு துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story