தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் விழிப்புணர்வு கோலப்போட்டி


தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் விழிப்புணர்வு கோலப்போட்டி
x
தினத்தந்தி 23 Jan 2021 12:37 AM GMT (Updated: 23 Jan 2021 12:37 AM GMT)

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் வருகிற 25-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி,

அந்த வகையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் வண்ண கோலப்போட்டி நடந்தது.

விழிப்புணர்வு வாசகங்களுடன்...

இந்த போட்டியில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 25 மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல வண்ண கோலங்களை வரைந்தனர். ஒவ்வொரு குழுவாக பிரிந்து இந்த கோலம் வரையும் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தேசிய வாக்காளர் தின நல்வாழ்த்துக்கள், 2021-ல் 18-வயது ஆன அனைத்து குடிமக்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்,

100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிப்போம், வாக்கு நமது உரிமை, பொறுப்புள்ள குடிமகன் வாக்களிப்பான், ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது நமது கடமை, ஓட்டு விற்பனைக்கு அல்ல என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் கோலங்கள் வரையப்பட்டு இருந்தன. தேசியக்கொடி வர்ணத்திலும் ஓட்டு போடுவதின் அடையாளமாக கையில் அடையாள மை வைத்து இருப்பது போன்றும் கோலங்கள் போடப்பட்டிருந்தது. மொத்தம் 25 கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

சப்-கலெக்டர்

இந்த கோலங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்துச் சென்றனர். சிலர் தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் சென்றனர். இதில், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் ஆகியோர் கலந்து ெகாண்டனர். அவர்கள் முன்னிலையில் கோலங்கள் வரையப்பட்டன.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டத்துக்கான திட்ட அதிகாரி பிச்சையா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, தோவாளை தாசில்தார் ஜூலியன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராஹிம், கிராம நிர்வாக அதிகாரி புரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

பின்னர், சிறந்த விழிப்புணர்வு கோலம் வரைந்த குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி முதல் பரிசு நெட்டாங்கோடு சக்தி சுயஉதவி குழுவுக்கும், 2-வது பரிசு அஞ்சுகிராமம் ரோஜா சுயஉதவி குழுவுக்கும், 3-ம் பரிசு கரும்பாட்டூர் ஜாஸ்மின் சுயஉதவி குழு மற்றும் ராஜாக்கமங்கலம் சிவசக்தி சுயஉதவி குழுவுக்கும் கிடைத்தன. தொடர்ந்து நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், வாக்களிப்பது குறித்த உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.


Next Story