வெங்காய பயிர்களில் அடிச்சாம்பல்-அழுகல் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரி விளக்கம்


வெங்காய பயிர்களில் அடிச்சாம்பல்-அழுகல் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 23 Jan 2021 6:38 AM IST (Updated: 23 Jan 2021 6:38 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் பகுதியில் வெங்காய பயிர்களை அடிச்சாம்பல் மற்றும் அழுகல் நோய் தாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரி தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

டி.என்.பாளையம்,

டி.என்.பாளையம் வட்டாரத்தில் கவுண்டம்பாளையம், கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, புள்ளப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 185 எக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளனர். தொடர்ச்சியாக பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக இங்குள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காய பயிர்களில் அடிச்சாம்பல் நோய் தாக்கம் மற்றும் அழுகல் நோய், இலைப்பேன் என்ற பூச்சியின் தாக்கமும் தென்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து டி.என்.பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தியாகராஜன் கூறியதாவது:-

சிக்கனம்

வெங்காய வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை சுற்றிலும் 0.25 சதவீதம் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது 0.1 சதவீதம் காப்பர் ஹைட்ராக்சைடு கரைசலை மண்ணில் வேர்கள் நனையும் படி ஊற்ற வேண்டும்.

பயிர் நட்ட 30-ம் நாள் 2.5 கிலோ சூடோமோனஸ் அல்லது 4.5 டிரைக்கோடெர்மா விரிடியை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். அடிச் சாம்பல் நோயை கட்டுப்படுத்த மாங்கோசெப் 2 கிராம், 1 லிட்டர் மேண்டி புரோப்பா மை அல்லது புரோப்பிநெப்பை 2 மில்லி லிட்டர் அளவில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து 10-12 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்

இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பகுதி மற்றும் குருத்து இலைகளுக்குள் கூட்டம் கூட்டமாக இருந்தபடி இலைகளின் பச்சையத்தை சுரண்டியும் சாற்றை உறிஞ்சியும் சேதம் விளைவிக்கிறது. வளர்ந்த பூச்சிகள் மிக சிறியதாகவும், கடும் பழுப்பு நிறத்தில் பேன் போன்று தோற்றமளிக்கும். தாக்கப்பட்ட பகுதிகள் இளம் வெண்மை நிற படைகளாக மாறி விடும்.

பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இலைகள் நுனியில் இருந்து கீழ் நோக்கி கரிந்தும் திரிந்தும் காணப்படும். இதன் தாக்குதலால் மகசூல் அதிகம் பாதிக்கப்படும்.

கண்காணிக்க வேண்டும்.

மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை ஹெக்டருக்கு 10 என்ற அளவில் பயிருக்கு மேல் 15 செ.மீ. உயரத்தில் இருக்கும் படி வைத்து கண்காணிக்கவும். வேப்ப எண்ணெய் 3 சதவீதம், வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் போன்றவை இலை பேன் இனப்பெருக்கத்தினை குறைத்திட உதவி செய்கிறது.

இவ்வாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தியாகராஜன் கூறியுள்ளார்.

Next Story