‘ஒற்றுமையுடன் செயல்பட்டால் இரட்டை இலையை யாராலும் வெல்ல முடியாது’; அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


மயிலம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது
x
மயிலம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியபோது
தினத்தந்தி 23 Jan 2021 9:32 AM IST (Updated: 23 Jan 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றுமையுடன் செயல்பட்டால் இரட்டை இலையை யாராலும் வெல்ல முடியாது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

செயல்வீரர்கள் கூட்டம்
மயிலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முப்புளி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் புலியனூர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

7 முறை வெற்றி
இந்த இயக்கம் தொடங்கியது முதல் இதுவரை 10 சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்திருக்கிறோம். இதில் 7 முறை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்கள். 1989-ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு கட்சி பிளவுபட்டது, நம்மோடு ஒற்றுமை இல்லை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் 3 மாதங்களில் ஜெயலலிதா அ.தி.மு.க.வை ஒன்றிணைத்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்தார்.

இந்த 3 மாதங்களில் நடந்த இடைத்தேர்லில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெற்றது. என்ன காரணம் கழகம் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டதால் வெற்றி பெற்றோம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இயக்கத்தை, இரட்டை இலை சின்னத்தை யாராலும் வெல்ல முடியாது என்பதாகும்.

நாம் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். சில தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். இந்த இயக்கம் தொடங்கி 50-வது ஆண்டு வரப்போகிறது. இந்த பொன்விழாவில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் நீடித்திட நாம் உழைக்க வேண்டும். இந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மயிலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story