வேட்டவலம் அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில்: கை, கால்களை கட்டி கிணற்றுக்குள் வீசி விவசாயி கொலை - ரூ.20 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய 3 பேர் கைது
மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் விவசாயியை கை, கால்களை கட்டி கிணற்றுக்குள் வீசி கொன்று விட்டு பணம் கேட்டு கடத்தல் நாடகமாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேட்டவலம்,
வேட்டவலத்தை அடுத்த கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 48), விவசாயி. இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குபேந்திரன் கடந்த 20-ந் தேதி இரவு சுமார் 8 மணியளவில் அவரது விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர் காலையில் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் குபேந்திரனின் மூத்த மகன் ராஜேஷ்கண்ணா தனது தந்தையை காணவில்லை என வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான குபேந்திரனை தேடி வந்தனர்.
குபேந்திரன் விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர். கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் தண்ணீருக்குள் கேமராவை வைத்து தேடினர்.
அதில் எதுவும் தெரியாததால் கிணற்றுக்குள் தேடும் முயற்சியைக் கைவிட்டனர். இதற்கிடையே குபேந்திரனின் மூத்த மகனான ராஜேஷ் கண்ணாவின் செல்போனுக்கு மாயமான குபேந்திரனின் போனில் இருந்து மர்ம நபர்கள் பேசினர்.
அதில், ‘‘உனது தந்தையை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 லட்சம் தர வேண்டும். வெறையூரில் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து பணத்தை கொடுக்க வேண்டும்.
இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உனது தந்தையை கொன்று விடுவோம்’’ என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்கண்ணா அது குறித்து வேட்டவலம் போலீசுக்கு தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் மர்ம நபர்கள் கேட்ட பணத்துடன் ராஜேஷ் கண்ணாவை அழைத்துக் கொண்டு வெறையூருக்கு சென்றனர். அப்போது மர்ம நபர்களிடம் இருந்து ராஜேஷ்கண்ணாவிற்கு மீண்டும் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு விழுப்புரம் வருமாறு கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் செல்போன் அழைப்பு வந்த இடம் குறித்து ரகசியமாக விசாரித்தனர்.
அதில் செல்போனில் பேசியது வென்னியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை பூங்கா (28) என்பதும், இவர் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று விட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், பாவாடை பூங்காவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குபேந்திரனை கூட்டாளிகளுடன் சேர்ந்து கை, கால்களை கட்டி கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கிணற்றுக்குள் கிடந்த குபேந்திரன் உடலை நேற்று காலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.பாவாடை பூங்கா மற்றும் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40), அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (31) ஆகியோர் கடந்த 20-ந் தேதி இரவு குபேந்திரனுடன் அவரது விவசாய நிலத்தில் வைத்து மது குடித்து உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், பாவாடைபூங்கா ஆகிய 3 பேரும் சேர்ந்து குபேந்திரன் கை, கால்களை கட்டி அவருடைய விவசாய கிணற்றுக்குள் வீசி கொலை செய்து விட்டு, குபேந்திரனின் செல்போனை எடுத்து கொண்டு 3 பேரும் ஒன்றும் தெரியாததுபோல் வீடுகளுக்கு சென்று விட்டனர். குபேந்திரனை அவர்களது குடும்பத்தினர் தேடுவது தெரியவந்ததும் அதனை பயன்படுத்தி பாவாடை பூங்கா பணம் பறிக்க திட்டமிட்டு குபேந்திரன் செல்போனிலிருந்து ராஜேஷ் கண்ணாவுக்கு போன் செய்து ரூ.20 லட்சம் ரொக்கம் கேட்டு மிரட்டி கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.இதனையே 3 பேரும் போலீசில் வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, பாவாைட பூங்கா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story