வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யும் வியாபாரிகளால் நஷ்டம் - குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யும் வியாபாரிகளால் நஷ்டம் ஏற்படுவதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் மற்றும் வேளாண்துறை வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 33 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள், ஏரிகள் சீரமைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 102 ஏரிகளில் 47 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன என்றார்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-
ராஜாதோப்பு அணை முழுமையாக நிரம்பி உள்ளது. இந்த அணையில் இருந்து ஒரு நாள் மட்டுமே பெத்தநாயக்கன்பாளையம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே அணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
பேரணாம்பட்டு பகுதியில் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் ஒன்றாக பேசி வைத்துக்கொண்டு நெல் ஒரு மூட்டைக்கு ரூ.700 முதல் ரூ.900 வரை மட்டுமே நிர்ணயம் செய்து வாங்குகின்றனர். இதனால் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். மேலும் வேலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் செய்ய வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் வருவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் வருகை தந்திருந்தார். அப்போது கூட்டத்தில், இதுவரை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டுகள் வந்ததில்லை. தற்போது வந்துள்ள சூப்பிரண்டு வேளாண் சார்ந்த படிப்பு படித்துள்ளார், ஆர்வத்துடன் இங்கு வந்துள்ளார் அவருக்கு நன்றி என கலெக்டர் தெரிவித்தார். அப்போது விவசாயிகளும் அவரின் வருகைக்கு கைகளை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது ஒரு விவசாயி, போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றி தெரிவித்து, விவசாய நிலங்களில் மோட்டார்கள் திருட்டு போகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதனால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
Related Tags :
Next Story