இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர்கள் உடலை வாங்கும் வரை கடலுக்குள் செல்லமாட்டோம் - மீனவ சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை வாங்கும் வரை கடலுக்குள் செல்லமாட்டோம் என்று மீனவ சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மெர்சியா (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்களின் படகின் மீது மோதி கடலில் மூழ்கடித்து, 4 மீனவர்களையும் கொலை செய்ததை கண்டித்து கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் இறந்த மீனவரகள்் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நிலை குறித்து நேற்று கோட்டைப்பட்டினம் விசைப்படகு சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவர்கள் 4 பேரின் உடலை ஒப்படைக்கும் வரை கடலுக்குள் செல்லமாட்டோம். வருகிற24-ந்தேதி அன்று தமிழக மீனவர்கள் 4 பேரை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மீனவர்களை கொலை செய்த இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தளம் முற்றிலுமாக களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
Related Tags :
Next Story