திருமணமான 3 மாதங்களில் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் - மன்னார்குடியில் பரிதாபம்
திருமணமான 3 மாதங்களில் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மன்னார்குடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருவண்டுதுறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செல்வராஜுக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி செல்வராஜ் மீண்டும் தான் வெளிநாடு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மன்னார்குடிக்கு வந்துள்ளார்.
அன்று இரவே மன்னார்குடியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை செல்வராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அறையின் கதவைத் திறந்து பார்க்க முயன்றபோது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. இதனால் கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் செல்வராஜ் கட்டிலில் பிணமாக கிடந்தார்.
இதனையடுத்து மன்னார்குடி போலீசார், தற்கொலை செய்து கொண்ட செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கதவை உள்பக்கம் தாழ் போட்டு விட்டு விஷம் குடித்து செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கும் என்பதால் உடல் அழகி துர்நாற்றம் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் வாலிபர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story