வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது


வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2021 9:59 PM IST (Updated: 23 Jan 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

வேடசந்தூர், எரியோடு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒருவர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அதில் வங்கிகளில் தனிநபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் எளிதில் பெற்று தரப்படும் என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. மேலும் அதில் ஒரு செல்போன் எண்ணும் இருந்தது. அதைப்பார்த்த எரியோடு, வேடசந்தூரை சேர்ந்த 7 பேர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினர்.

அப்போது அவர்களுடன் பேசிய மர்ம நபர், தான் குறிப்பிட்ட வங்கிகளில் கடன் பிரிவு முகவராக உள்ளேன். அந்த வங்கிகளில் இருந்து குறைந்த வட்டியில் தன்னால் கடன் பெற்று தரமுடியும். இதற்காக தனக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய 7 பேரும் கட்டணத்தை செலுத்த ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே 7 பேரையும் வரவழைத்த அந்த நபர், அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை கட்டணமாக பெற்றுக்கொண்டார்.

பின்னர் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவர்களுக்கு கடன் பெற்றுத்தருவதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் கூறியபடி கடன் பெற்றுத்தரவில்லை. இதையடுத்து 7 பேரும் அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அது ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. அதன் பிறகு தான் அந்த நபர் பண மோசடி செய்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகே‌‌ஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவிட்டார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், நல்லதம்பி மற்றும் போலீசார் மோசடி நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கடன் பெற்று தருவதாக கூறி 7 பேரிடமும் பணம் பெற்று மோசடி செய்தது ஈரோட்டை சேர்ந்த பிரகா‌‌ஷ் (வயது 33) என்பதும், கோவையில் அவர் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவைக்கு விரைந்து சென்ற போலீசார், நேற்று பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story