சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமித்த கடைகளால் நெரிசலில் தத்தளிக்கும் திண்டுக்கல்


சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமித்த கடைகளால் நெரிசலில் தத்தளிக்கும் திண்டுக்கல்
x
தினத்தந்தி 24 Jan 2021 3:18 AM IST (Updated: 24 Jan 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமித்த கடைகளால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தலைவிரித்தாடுகிறது. வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே காந்தி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. மேற்கு தாலுகா அலுவலக சாலை, மார்க்கெட் சாலை சந்திப்பு பகுதியில் மார்க்கெட் இருக்கிறது. இங்கு திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வெளிமாவட்டங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் மார்க்கெட் மூடப்பட்டது. மேலும் மார்க்கெட்டில் இருந்த பழைய கடைகளை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணி நடக்கிறது.

இதனால் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரி, ஐ.டி.ஐ. வளாகங்களில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டது. பின்னர் காந்தி மார்க்கெட் அருகேயுள்ள நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு தற்காலிக மார்க்கெட் மாற்றப்பட்டது. அங்கு மழைக்காலத்தில் மைதானம் சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள் பெரும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக சமீபத்தில் பெய்த மழையினால் மார்க்கெட் செயல்பட்ட மைதானம் குளம் போல் ஆகி விட்டது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்காக நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது.

எனவே, பழனி சாலையில் உள்ள பழைய லாரி பேட்டைக்கு தற்காலிக மார்க்கெட் மாற்றப்பட்டது. ஆனால், அனைத்து வியாபாரிகளுக்கும் அங்கு கடைகள் அமைக்க அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் காந்தி மார்க்கெட் முன்புள்ள சாலை, தாலுகா அலுவலக சாலை ஆகியவற்றில் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாலையின் இருபக்கங்களையும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு காய்கறிகளை வாங்குவதற்கு திண்டுக்கல் நகரை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் குவிகின்றனர். அவ்வாறு காய்கறி வாங்க வருபவர்களின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பஸ், கார், லாரிகள் என இதர வாகனங்களும் அந்த வழியாக செல்கின்றன. இதனால் காந்தி மார்க்கெட் பகுதி, தினமும் நெரிசலில் தத்தளித்து வருகிறது.

நெரிசலில் சிக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். மேலும் தேவையற்ற எரிபொருள் செலவு, காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story