‘வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் போராட்டம் நடத்தப்படும்’ விக்கிரமராஜா பேட்டி


‘வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் போராட்டம் நடத்தப்படும்’ விக்கிரமராஜா பேட்டி
x

‘பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கடைகளை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது. வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

நெல்லை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு மற்றும் அறிமுக விழா பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. நெல்லை மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் நயன்சிங், நெல்லை மாவட்ட நிர்வாகி விநாயகம் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சின்னதுரை, தென்காசி மாவட்ட தலைவர் வைகுண்டராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நெல்லை மாநகர செயலாளர் ஸ்டீபன்குமார் முன்னிலை வகித்தார்.

மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், செயலாளர் எம்.ஆர்.குணசேகரன், பொருளாளர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோரை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசினார். இதைத்தொடர்ந்து விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்

கொரோனா காலகட்டத்தில் வணிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த நிலை மாறி கொரோனா பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் போடப்பட்ட அனைத்து சட்டங்களையும் அரசு வாபஸ் பெற வேண்டும். அந்த காலகட்டத்தில் வியாபாரிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையத்தில் இடிக்கப்பட்ட கடைகளை மீண்டும் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மார்க்கெட்டுகளில் இடிக்கப்பட்ட கடைகளும் கட்டப்படாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம்

இந்த நிலையில் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள 540 கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். இதனால் வணிகர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வியாபாரிகளுடன் அரசு அதிகாரிகள் கலந்தாலோசித்து இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள் இடிப்பு மற்றும் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டால் இதை கண்டித்து வணிகர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தக்கூடிய நிலை ஏற்படும்.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தேர்தல் நேரத்தில் நாங்கள் போராட்டம் நடத்துவோம். எங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை தேர்தலில் நாங்கள் ஆதரிப்போம். வணிகர்கள் நலவாரியம் மீண்டும் செயல்பட வேண்டும். தமிழக அரசு பட்ஜெட் தயாரிக்கும் முன் வியாபாரிகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பணைகள்

கூட்டத்தில், மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து முடித்து வணிகர்களுக்கு கடை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சரக்கு சேவை வரிகள் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை வணிகர்களுடன் கலந்தாய்வு செய்து களைந்திட வேண்டும். கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக இறந்த வணிகர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல், தட்சணமாற நாடார் சங்க கல்லூரி ஆட்சி மன்ற தலைவர் கணேசன், எஸ்.கே.எம்.சிவகுமார், தி.மு.க. நெசவாளர் அணி செயலாளர் அந்தோணி, தே.மு.தி.க. வர்த்தக அணி செயலாளர் முகமது அலி, தட்சணமாற நாடார் சங்க முன்னாள் செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட கடைகளுக்கு விக்கிரமராஜா சென்று பார்வையிட்டு வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story