சிவமொக்கா வெடிவிபத்துக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவே பொறுப்பு சித்தராமையா பேட்டி
சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவமொக்கா வெடிவிபத்து சம்பவத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பாவே பொறுப்பு என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிவமொக்காவில் கல்குவாரி தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்ட வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நடைபெறும் கல்குவாரிகள் அரசின் அனுமதி பெற்று முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். இதன் மூலம் கர்நாடகத்தில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரி தொழிலை எடியூரப்பா ஊக்கப்படுத்துகிறார் என்பது தெரிகிறது.
சட்டவிரோதமாக கல்குவாரி தொழில் செய்வது குற்றம். அதற்கு என்ன தண்டனை?. முறைகேடாக கல்குவாரி தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் அதை முறைப்படுத்துவதாக கூறலாமா?. கனிம சுரங்க தொழில் சட்டம் எதற்காக இருக்க வேண்டும்?. முதல்-மந்திரியின் கருத்தை நான் கண்டிக்கிறேன். இது பொறுப்பற்ற கருத்தின் உச்சம்.
முதல்-மந்திரியே, சட்டவிரோத கல்குவாரிகளை முறைப்படுத்துவதாக கூறுவது சரியல்ல. இது முறைகேடுகளை ஊக்குவிப்பதாக உள்ளது. மாநிலத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவமொக்கா கலெக்டரிடம் நான் பேசினேன்.
ஆந்திராவில் இருந்து ஜெலட்டின் வெடிபொருட்கள் உரிய அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்டுள்ளது. இது முதல் குற்றம். கொண்டு வரப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்காதது 2-வது குற்றம். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த சிவமொக்கா வெடிவிபத்துக்கு முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் அந்த மாவட்ட பொறுப்பு மந்திரி ஈசுவரப்பா ஆகியோரே பொறுப்பு.
சிவமொக்கா மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கல்குவாரி தொழில் நடப்பதாக பா.ஜனதாவை சேர்ந்த ஆயனூர் மஞ்சுநாத் எம்.எல்.சி. கூறியுள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பாவின் மாவட்டத்தில் இந்த நிலை என்றால் சற்று யோசித்து பாருங்கள். மாநிலத்தின் பிற பகுதிகளில் நிலைமை எவ்வாறு இருக்கும். சிவமொக்காவில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடப்பதை மந்திரி ஈசுவரப்பாவே ஒப்புக் கொண்டுள்ளார். அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.
மந்திரியே இவ்வாறு கூறினால் அதிகாரிகள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஐகோாட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எழுத்தாளர் ஹம்பனா, மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஜனநாயகத்தில் அரசுகளின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கூற உரிமை உண்டு. எழுத்தாளரை அழைத்து விசாரணை நடத்தியது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். வருகிற 28-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதையொட்டி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அன்றைய தினம் காலை 9 மணிக்கு பெங்களூருவில் கூட்டியுள்ளேன். அந்த கூட்டத்தில் மேல்-சபை துணைத்தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story