காங்கேயத்தில் 5 நாட்களாக நடந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்


காங்கேயத்தில் 5 நாட்களாக நடந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:01 AM IST (Updated: 24 Jan 2021 5:03 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் விவசாயிகள் தொடர்ந்து 5 நாட்களாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

உண்ணாவிரதம்

வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழு மற்றும் விவசாயிகள் சார்பில் நேற்று 5-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. 
இந்த போராட்டத்தில் காங்கேயம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நேரில் வந்து உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மூத்த வக்கீல் சுப்பிரமணி கூறியதாவது:-
வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கேயத்தில் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணா விரதம் நடத்தி வரும் விவசாயிகளிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டதன் படி, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக் குழுவின் தலைவர் வேலுச்சாமி நேற்று இரவு 9 மணியளவில் உண்ணாவிரத பந்தலில் அறிவித்தார். மேலும், இது தொடர்பாக 25-ந் தேதி (நாளை) சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவதற்கு போராட்டக் குழுவினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, உண்ணாவிரதம் இருந்த 26 விவசாயிகளுக்கும் பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, காங்கேயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலர் என்.எஸ்.என்.நடராஜ், திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், பா.ஜனதா காங்கேயம் நகரத் தலைவர் கலா நடராஜன், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story