மாமல்லபுரத்தில் கலாசார கலை விழா தொடக்கம்; அடுத்த மாதம் 21-ந்தேதி வரை நடைபெறும்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வார இறுதி கலாசார கலை விழா மாமல்லபுரம் மரக பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் நேற்று தொடங்கியது.
மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ச.ராஜாராமன் தலைமையில், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் முன்னிலையில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. எஸ்.செல்வம் குத்துவிளக்கேற்றி கலாசார கலை விழாவை தொடங்கி வைத்தார்.
நேற்று முதல் நாள் நிகழ்ச்சியில் மீனாட்சிராகவன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், திருவண்ணாமலை மகேந்திரன் குழுவினரின் தப்பாட்டம், கிராமிய நடன நிகழ்ச்சியும் நடந்தது. இந்த கலாசார கலை விழாவில் பங்கேற்று நடனம் ஆடிய நடனக்குழுவினருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் சங்க மூத்த தலைவர் எம்.கே.சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலாசார கலை விழா வருகிற பிப்ரவரி 21-ந்தேதி வரை 2 மாதம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story