செங்கல்பட்டில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; டிரைவர் பலி; 5 பேர் படுகாயம்


லாரிகள் நேருக்கு-நேர் மோதி விபத்துக்குள்ளாகி கிடக்கும் காட்சியை படத்தில் காணலாம்.
x
லாரிகள் நேருக்கு-நேர் மோதி விபத்துக்குள்ளாகி கிடக்கும் காட்சியை படத்தில் காணலாம்.

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

நேருக்கு நேர் மோதல்
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி டிரைவர் உள்பட 6 பேருடன் லாரி ஒன்று செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சோஹைல் (வயது 23) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி சென்ற மற்றொரு லாரி வேகமாக நேருக்கு, நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டிச்சென்ற சோஹைல் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதே லாரியில் பயணம் செய்த 5 பேர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கிடந்தனர். இந்த நிலையில், விபத்துக்குள்ளாகி கிடந்த 2 லாரிகளுக்கிடையே சென்னையில் இருந்து வந்த மற்றொரு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

5 பேர் படுகாயம்
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், காயமடைந்து கிடந்த 5 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் பலியாகி கிடந்த சோஹைல் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story