தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து 50 சதவீத இடங்களை பெற முடியாததற்கு மத்திய அரசே பொறுப்பு நாராயணசாமி குற்றச்சாட்டு
தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசுக்கு 50 சதவீத இடங்களை பெற முடியாமல் போனதற்கு கவர்னரும், மத்திய அரசும் தான் பொறுப்பு என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
புதுவை அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கோப்புகளை கவர்னர் நிறுத்தி வைத்து இருந்து 2 மாதங்களுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். பின்னர் சுகாதார துறைக்கு போனது.
அதன்பின் சில விளக்கங்களை கேட்டு அந்த கோப்பு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அதில், மத்திய அரசு ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு மாற்ற விதிமுறைகளை கொண்டுவர தேவையான ஆயத்த வேலைகளை செய்து வருவதாகவும், அது குறித்து புதுவை அரசு கருத்து தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு உரிய பதில் அளித்து கடந்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி மீண்டும் கோப்புகளை அனுப்பினோம். தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடாக இருக்கும்போது, புதுவைக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது. புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடங்களுக்கு மத்திய அரசும், கவர்னரும் முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். கடந்த மாதம் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்திய போது புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசுக்கு 50 சதவீத இடங்களை பெற முடியாமல் போனதற்கு மத்திய அரசும், கவர்னரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்து அதற்கான கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதிலும் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறி கவர்னர் அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
மருத்துவ படிப்பு மத்திய அரசின் அதிகார வரம்பில் இருப்பதால் அது குறித்து அரசாணை வெளியிட முடியாது என்று மத்தி ய சுகாதாரத் துறையிடம் இருந்து தற்போது பதில் வந்துள்ளது.
புதுவையை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பா.ஜ.க.வினர் தற்போது ரவுடிகளையும், குண்டர்களையும் தங்கள் கட்சியில் இணைத்து வருகின்றனர். தேடப்படும் குற்றவாளியான பெண் தாதா எழிலரசி தற்போது பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story