புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்


வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளை.
x
வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளை.
தினத்தந்தி 24 Jan 2021 6:57 AM IST (Updated: 24 Jan 2021 6:57 AM IST)
t-max-icont-min-icon

வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் 66-வது ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாயவன் பெருமாள் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் மாயன் பெருமாள் கோவில் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த மாடுகளை வீரர்கள் பிடிக்கவில்லை.

இதில் 200 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.

இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 380 களைகள் அவிழ்த்து விடப்பட்டன.

14 பேர் காயம்
களைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க மோதிரம், வெள்ளி நாணயம், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், கட்டில்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கோட்டாட்சியர் தண்டபாணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தாசில்தார் கலைமணி மற்றும் அதிகாரிகள் அலுவலர்களுக்கென அமைக்கப்பட்ட மேடையில் இருந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு
இந்த ஜல்லிக்கட்டை காண திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ஆலங்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வன்னியன் விடுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story