காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு


காலவரையற்ற விடுமுறை விட்டும் வெளியேறாததால் மருத்துவக்கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீா் துண்டிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 1:27 AM GMT (Updated: 24 Jan 2021 1:27 AM GMT)

காலவரையற்ற விடுமுறை விட்டும் மாணவர் கள் வெளியேறாததால் மருத்துவக் கல்லூரி விடுதியில் மின்சாரம், தண்ணீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் வாளியுடன் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அரசு கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி கடந்த 45 நாட்களாக மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கடந்த 20-ந் தேதி மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அதுமட்டுமின்றி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை தவிர மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறவும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் மாணவர்கள், தாங்கள் உணவு கட்டணம் கட்டி உள்ளதால் விடுதியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மதியம் முதல் விடுதியில் மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் மருத்துவக்கல்லூரி மாணவிகள் விடுதியில் மின்சாரம், தண்ணீர் வினியோகம் ஆகியவை துண்டிக்கப்பட்டது. இதனால் விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் குளிக்க முடியாமல் அவதியுற்றனர். இதனை அடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதி முன்பு மாணவிகள் காலி வாளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியில் இருந்து உணவு வரவழைத்து போராடும் இடத்திலேயே சாப்பிட்டனர். மேலும் இந்த மாணவர்களுக்கு சிதம்பரம் ஆட்டோ சங்கத்தினர் பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்கினர்.

Next Story