இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு; அமைச்சர்-கலெக்டர் அஞ்சலி செலுத்தினர்
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல்களுக்கு அமைச்சர், கலெக்டர் மற்றும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
4 மீனவர்கள் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரேக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மெர்சியா (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பல் மூலம், தமிழக மீனவர்களின் படகின் மீது மோதி கடலில் மூழ்கடித்து 4 மீனவர்களையும் கொலை செய்தனர்.அதனை தொடர்ந்து மீனவர்களின் உடலை விரைவாக தமிழகம் கொண்டு வர மீனவர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
உடல்கள் ஒப்படைப்பு
இதையடுத்து தமிழக அரசு, மீனவர்கள் உடலை தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மீனவர்களின் உடலை கடல் வழியே ராமேஸ்வரம் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு மீனவர்களின் உடல்களை பெற கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 விசைப்படகுகள் இந்திய எல்லையான 20 நாட்டிக்கல் தொலைவிற்கு சென்றது. அங்கு ஏற்கனவே இலங்கை கடற்படையினரிடம் உடலை பெற்றுக் கொண்டு தயார் நிலையில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர் காலை 11 மணிக்கு தமிழக
மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் குவிப்பு
தொடர்ந்து 4 மீனவர்கள் உடல்களையும் படகில் ஏற்றிக் கொண்டு கோட்டைப்பட்டினம் துறைமுகம் புறப்பட்டனர். 4 பேரின் உடல்கள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வருகிறது என்ற செய்தி பரவியதை அடுத்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் குவிய தொடங்கினர்.
உடலை ஏற்றி செல்ல 4 ஆம்புலன்ஸ் வாகனமும் துறைமுகத்திற்கு வந்தன. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமைச்சர், அதிகாரிகள் அஞ்சலி
மதியம் 2.30 மணியளவில் மீனவர்கள் உடல்கள் விசைப்படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவர்களின் உடல் மீன்பிடித்தளத்தில் அஞ்சலிக்காக வரிசையாக வைக்கப்பட்டது.
மீனவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கலெக்டர் உமா மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கடலோர காவல் குழும காவல் மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஜெயந்தி, ரத்தின சபாபதி எம்.எல்.ஏ., மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா, மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன், உதவி இயக்குனர் குமரேசன், தாசில்தார் ஜமுனா, துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் மீனவர்களின் உடல்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.அதன்பின்னர் ஆம்புலன்ஸ்களில் மீனவர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டது. ஆம்புலன்ஸ் உடன் புதுக்கோட்டை மாவட்ட போலீசார்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆகியோர் சென்று புதுக்கோட்டை மாவட்ட எல்லையான அரசங்கரை சோதனைசாவடியில் வைத்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதன்பின் உடலை பெற்றுக் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் மீனவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அரசு வேலை
முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படகை மூழ்கடித்து அதில் சென்ற 4 மீனவர்கள் உயிரிழக்க செய்த இலங்கை அரசை தமிழக அரசு வன்மையாக கண்டித்துள்ளது. மீனவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்தது. இறந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் தமிழக அரசு வழங்கிள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு, மத்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தும். இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.
Related Tags :
Next Story