நீலகிரியில் 28 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை; அரசு முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தகவல்


அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, பயனாளி ஒருவருக்கு மருந்து பெட்டகத்தை அரசு முதன்மை செயலாளர் வழங்கியபோது
x
அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, பயனாளி ஒருவருக்கு மருந்து பெட்டகத்தை அரசு முதன்மை செயலாளர் வழங்கியபோது
தினத்தந்தி 24 Jan 2021 10:25 AM IST (Updated: 24 Jan 2021 10:25 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 28 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

மினி கிளினிக் திறப்பு
ஊட்டி அருக உள்ள குந்தா கிண்ணகொரை கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளாரும், இன்கோசர்வ் தலைமை செயல் இயக்குனருமான சுப்ரியா சாகு கலந்து கொண்டு மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டசத்து பெட்டகத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி நீலகிரி மாவட்டத்தில் 28 அம்மா மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்டமாக ஜெகதளா, கைகாட்டி, காந்தல் சூண்டி, சேரங்கோடு, பேரட்டி, பழதோட்டம், கப்பச்சி ஆகிய கிராமங்களில் திறக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து கிண்ணகொரை கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்
கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மினி கிளினிக் தொடங்கபட்டு உள்ளதால் கிராமத்தை சுற்றியுள்ள ஓசாஹட்டி மேலூர், பிக்கட்டி, தரணிய கண்டி, ஹிரிய சீகை தேயிலை தோட்டம் பகுதிகளை சேர்ந்த 1,800 மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடையலாம். மேலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப கால பரிசோதனை, கருவில் உள்ள குழந்தைகளின் இதய துடிப்பு போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள முடியும்.

இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், செவிலியர், மருதுவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். இந்த மினி கிளினிக் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும். இந்த மருத்துவ சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதாரத்துறை துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, வட்டார மருத்துவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story