ஈரோட்டில் இன்று ராகுல்காந்தி எம்.பி.தேர்தல் பிரசாரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு


ஈரோட்டில் இன்று ராகுல்காந்தி எம்.பி.தேர்தல் பிரசாரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 11:56 AM IST (Updated: 24 Jan 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராகுல்காந்தி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஈரோடு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இன்று காலை 10 மணிக்கு ஊத்துக்குளிக்கு வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். 10.30 மணிக்கு அவர் பெருந்துறையில் பொதுமக்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஈரோடு வரும் ராகுல் காந்தி அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் மற்றும் ஈ.வி.கே.சம்பத் உருவ சிலைகளுக்கு பகல் 11 மணிக்கு மாலை அணிவிக்கிறார்.

மரியாதை

பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கும், மதியம் 12 மணிக்கு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைகளுக்கும் ராகுல் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

மதியம் 12.30 மணிக்கு அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பிற்பகல் 3 மணிக்கு காங்கேயத்தில் கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு 4 மணிக்கு தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

ஆலோசனை கூட்டம்

ராகுல்காந்தி வருகையையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகிறார்கள். மேலும் ராகுல் காந்தி வருகை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி வருகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story