ஆரணி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை; தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு


ஆரணி ஆற்று தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை; தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு
x
தினத்தந்தி 24 Jan 2021 11:56 AM IST (Updated: 24 Jan 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பாபு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தேவியை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, போந்தவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் உள்ள சுடுகாட்டு நிலம் 30 வருடங்களுக்கு முன் தனியார் பெயரில் பட்டா மாறுதல் ஆகி உள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே தனியார் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி தலைவராக உள்ள வக்கீல் தில்லைகுமார் தலைமையில் கிராம பொதுமக்கள் சுமார் 100 பேர் தாசில்தார் தேவியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆகையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரை பாலத்தை உடனடியாக சீரமைத்து 30 கிராம மக்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story