இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் - ஆம்புலன்சை முற்றுகையிட்டு ராமேசுவரம் சாலையில் மறியல்


இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் - ஆம்புலன்சை முற்றுகையிட்டு ராமேசுவரம் சாலையில் மறியல்
x
தினத்தந்தி 24 Jan 2021 7:55 PM IST (Updated: 24 Jan 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டன. ஒருவரது உடலை காண்பி்க்காமல் மயானத்துக்கு கொண்டு சென்றதால் ராமேசுவரம் சாலையில் ஏராளமானோர் திரண்டு மறியல் செய்தனர்.

ராமேசுவரம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மெசியான் (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்த போது, இலங்கை கடற்படையினர் தங்களது கப்பல் மூலம், ராமேசுவரம் மீனவர்களின் படகின் மீது மோதி படகை மூழ்கடித்து 4 மீனவர்களையும் கொலை செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து, மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். 4 மீனவர்களின் மரணத்துக்கு காரணமான இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மீனவர்கள் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மீனவர்களின் உடலை கடல் வழியே ராமேசுவரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு, மீனவர்களின் உடல்களை பெற கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 விசைப்படகுகள் இந்திய எல்லையான 20 கடல் ைமல் தொலைவிற்கு சென்றன. அங்கு ஏற்கனவே இலங்கை கடற்படையினரிடம் உடலை பெற்றுக் கொண்டு தயார் நிலையில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர், பகல் 11 மணிக்கு அந்த மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து 4 மீனவர்கள் உடல்களையும் படகில் ஏற்றிக் கொண்டு கோட்டைப்பட்டினம் துறைமுகம் புறப்பட்டனர். 4 பேரின் உடல்கள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வருகிறது என்ற செய்தி பரவியதை அடுத்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் குவிய தொடங்கினர்.

உடலை ஏற்றி செல்ல 4 ஆம்புலன்ஸ் வாகனங்களும் துறைமுகத்திற்கு வந்தன. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதியம் 2.30 மணி அளவில் மீனவர்கள் உடல்கள் விசைப்படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவர்களின் உடல் மீன்பிடித்தளத்தில் அஞ்சலிக்காக வரிசையாக வைக்கப்பட்டன. மீனவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கலெக்டர் உமா மகேசுவரி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், கடலோர காவல் மண்டல சூப்பிரண்டு ஜெயந்தி, ரத்தின சபாபதி எம்.எல்.ஏ., மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் ஆம்புலன்ஸ்களில் மீனவர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு ராமேசுவரம் புறப்பட்டது. ஆம்புலன்ஸ் உடன் புதுக்கோட்டை மாவட்ட போலீசார்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆகியோர் சென்று புதுக்கோட்டை மாவட்ட எல்லையான அரசங்கரை சோதனைசாவடியில் வைத்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின் உடல்கள் ராமநாதபுரத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் ஆம்புலன்சில் இருந்த மீனவர்களின் உடல்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து, மீனவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டன.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியான் உடலை சொந்த ஊருக்குகொண்டுவந்தபோது அவரது, உறவினர்கள் உள்பட ஏராளமான மீனவர்கள் திரண்டு இருந்தனர். புனித யாகப்பர் மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலை பகுதியில் அமர்ந்திருந்தனர். ஆனால் மெசியான் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் நிற்காமல் நேரடியாக மயானத்துக்கு சென்றுவிட்டது.

இதனால் உறவினர்களும், மீனவர்களும் ஆத்திரம் அடைந்தனர். மீனவரின் உடலை காண்பிக்காமல் மயானத்திற்கு எடுத்து சென்றதை கண்டித்து, ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் சூப்பிரண்டு ஜெயசிங், தாசில்தார் அப்துல் ஜப்பார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, “மயானத்துக்கு கொண்டு சென்ற மீனவர் உடலை மீண்டும் கொண்டு வர வேண்டும், அப்போதுதான் நாங்கள் கலைந்து செல்வோம்” என்று கூறினர். போலீசார் பேச்சுக்கு பின்னர் ஆம்புலன்ஸ் போராட்டம் நடத்திய இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உடலை வைத்து பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.

ஆனால் ஆம்புலன்சில் இருந்தவர்கள் மீனவர் மெசியானின் உறவினர்களை மட்டும் அழைத்துக்கொண்டு மயானத்துக்கு புறப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் அந்த ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்தும், முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அதிகாரிகள் மீனவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்தனர். இந்த மறியல் போராட்டத்தால் ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து மீனவர் மெசியானின் உடல் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. அதே போன்று காதனேந்தலில் நாகராஜ் உடலும், மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் சாம்சன் உடலும், உச்சிப்புளி பகுதியில் செந்தில்குமார் உடலும் அடக்கம் செய்யப்பட்டன. பதற்றம் நிலவுவதால் அந்த ஊர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story