நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் - சீமான் அறிமுகம் செய்துவைத்தார்


நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் - சீமான் அறிமுகம் செய்துவைத்தார்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:23 PM GMT (Updated: 24 Jan 2021 5:23 PM GMT)

மதுரை உள்பட 6 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரையில் அறிமுகம் செய்துவைத்தார்.

மதுரை,

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆடு, மாடு வளர்த்தல் என்பது தொழிலாக, வெகுமானமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதனை தற்போது அவமானமாக பார்க்கின்றனர். ஓட்டுக்காகத்தான் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரேஷன் கடைகளுக்கு எதிரிலேயே உள்ள டாஸ்மாக் கடைகளில் அந்த பணத்தை அரசு வசூல் செய்துவிட்டது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாதி ராணுவத்தினர் நாம் தமிழர் கட்சியினர்தான். அவர்களிடம் துப்பாக்கி உள்ளது, ஆனால் தோட்டாக்கள் இல்லை என்று தொலைபேசியில் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு சரியான உணவும் தரப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை சுமத்திய ராணுவ வீரரை மனநோயாளி என மத்திய அரசு தெரிவிக்கிறது.

நாம் தமிழர் கட்சி உலக மக்களுக்கான கட்சி. அருகில் வந்து பேச துணிச்சல் இல்லாமல் ஓடக்கூடியவர்கள் நம்மை தேச விரோதிகள் என்று கூறுகின்றனர். தற்போது நமது நாட்டில் சாட்சிகள் இல்லாமல் எந்த தவறும் செய்யலாம் என்ற அவலம் ஏற்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தணையால் பிச்சைக்காரர்கள் எந்திரம் மூலம் பிச்சை எடுப்பதாக பெருமைப்படுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிச்சைக்காரர்கள் இல்லாத தேசத்தை உருவாக்குவோம்.

தற்போதைய ஆட்சி என்பது பசியால் உயிரிழப்பவர்களை விறகுக்கு பதிலாக எந்திரம் மூலம் எரிக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டுள்ளது. பசி என்பதே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கையாகும். எங்களது ஆட்சியில் இந்திய மருத்துவக்கழகம் தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி தரத்திற்கு சான்றளிக்க தேவையில்லை என அறிவிப்போம். படிக்காதவர்களை சுற்றுலா வழிகாட்டியாக மாற்றுவோம். பிரபாகரனின் கனவை தமிழகத்தில் நான் நிறைவேற்றுவேன்.

கல்வி, வேளாண்மை மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசு துறைகளின் செயல்பாடுகள் அனைத்தும் தரமிழந்து கேவலமாக உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் படிப்பதில்லை. டெல்லி மற்றும் கேரளாவில் அரசுப்பள்ளிகள் தரமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தமிழர்களின் தன்மானத்துக்கு இழுக்காக அமைந்துள்ளது.

இந்தி படித்தவர்கள் தமிழகத்தில் போர்வையும், குல்பி ஐசும் விற்கும் நிலை உள்ளது. தமிழகத்திற்கு வரும் வடமாநிலத ்தவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் பேசும் பானிபூரி வியாபாரியிடம் மட்டுமே நான் வாங்கி உண்பேன். வெளிநாடுகளில் அறிவுக்கு தான் வேலை தருகின்றனரே தவிர, மொழிக்காக தருவதில்லை. நம்நாடு இக்கட்டான சூழலில் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

நாம் தமிழரை தற்போது நிராகரிக்க முடியாத சூழ்நிலை உருவாகிஉள்ளது. நமக்காக மக்கள் காத்திருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி என்ற கப்பலுக்கு நான் தான் ஒரே மாலுமி. நம்பிக்கை இருந்தால் என்னோடு பயணம் செய்யுங்கள். இல்லையெனில் கட்சியை விட்டு வெளியேறுங்கள். கட்சி அறிவித்த வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுங்கள். இந்த தேர்தலில் ஒருங்கிணைந்து போராட வேண்டும். விட்டுவிடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். அதன்படி, மதுரை மேலூர் தொகுதிக்கு கருப்புசாமி, மதுரை கிழக்கு லதா ஜவார், சோழவந்தான் செங்கண்ணன், மதுரை வடக்கு அன்பரசி, மதுரை தெற்கு அப்பாஸ், மதுரை மத்திய தொகுதி பாண்டியம்மாள், மதுரை மேற்கு வெற்றிக்குமரன், திருப்பரங்குன்றம் ரேவதி, திருமங்கலம் சாரல், உசிலம்பட்டி ஐயுந்துக்கோவிலான் ஆகியோரும்,

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி ஜெயக்குமார், பெரியகுளம் விமலா, போடிநாயக்கனூர் பிரேம், கம்பம் அனீஸ் பாத்திமா ஆகியோரும், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் ஜெயராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அபிநயா, சிவகாசி கனகபிரியா, விருதுநகர் செல்வக்குமார், அருப்புக்கோட்டை உமா அடைக்கலம், திருச்சுழி ஆனந்தஜோதி ஆகியோரும்,

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி துரைமாணிக்கம், திருப்பத்தூர் கோட்டைகுமார், சிவகங்கை மல்லிகா, மானாமதுரை சண்முகபிரியா ஆகியோரும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி வினோத் ராஜசேகர், ஒட்டன்சத்திரம் சக்திதேவி, ஆத்தூர் சைமன், நிலக்கோட்டை வசந்தாதேவி, நத்தம் சிவசங்கரன், திண்டுக்கல் சுந்தர், வேடசந்தூர் பெதுமணி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சசிகலா சண்முகநாதன், திருவாடானை ஜவகர், ராமநாதபுரம் சிவக்குமார், முதுகுளத்தூர் ரகுமத்துனிசா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story