பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வினை மாணவ மாணவிகள் 1,612 பேர் எழுதினர்; 117 பேர் வரவில்லை.
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வினை மாணவ-மாணவிகள் 1,612 பேர் எழுதினர். 117 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பெரம்பலூர்;
2020-21-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 284 மாணவர்களும், 498 மாணவிகளும் என மொத்தம் 782 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 356 மாணவர்களும், 591 மாணவிகளும் என மொத்தம் 947 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் 7 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 13 மையங்களிலும் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. ஒரே வார்த்தையில் விடையளித்து அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் ஷேடு செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தலால் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தோ்வு எழுதினா். ஒரு தேர்வறையில் 10 மாணவ- மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடந்தன.
ஆய்வு
தேர்வு மையங்களை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வில் 260 மாணவர்களும், 465 மாணவிகளும் என மொத்தம் 725 பேர் பங்கேற்று தேர்வை ஆர்வத்துடன் எழுதினர். 24 மாணவர்களும், 33 மாணவிகளும் என மொத்தம் 57 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 325 மாணவர்களும், 562 மாணவிகளும் என மொத்தம் 887 பேர் பங்கேற்று தேர்வினை ஆர்வத்துடன் எழுதினர். 31 மாணவர்களும், 29 மாணவிகளும் என மொத்தம் 60 பேர் தேர்வுக்கு வரவில்லை.
இந்த தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மனதிறன் கல்வி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் 10, 11, 12-ம் வகுப்புகள் பயிலும்போது ஆண்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story