தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பேட்டி
தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில்மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமைய்யா, தொழில் அதிபர் வரதராஜ், மகளிர் அணி மாநில துணைத்தலைவர் சுந்தரவள்ளி, கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் 60 நாட்கள் கடந்த நிலையிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். நாளை (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினத்தன்று, டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில், டிராக்டர் மற்றும் வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தடுப்பதற்கு மத்திய அரசும், பல மாநில அரசுகளும் முயற்சி செய்கின்றன. எத்தனை முயற்சிகள் செய்தாலும் பேரணி நடக்கும்.
விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு தனது பிடிவாத போக்கை கைவிட வேண்டும். தமிழக மீனவர்களின் தொழில், உடமை மற்றும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பிரதமர் மோடி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் பறந்ததை போல் இலங்கை அரசால் 4 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் இழப்பீட்டை இலங்கை அரசிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை. தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளது. அதேபோல் பா.ஜனதா, அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணி இருக்கிறது. தி.மு.க., தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெறும். தேர்தல் தேதி அறிவித்த பின் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும். நாங்கள் அணி மாற மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story