ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக பணியாளர்கள் 80 பேருக்கு ரூ.23¾ கோடி மதிப்பில் பணப்பலன்கள்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக பணியாளர்கள் 80 பேருக்கு ரூ.23¾ கோடி மதிப்பில் பணப்பலன்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
பணப்பலன்கள்
விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 80 ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் போக்குவரத்து பணிமனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு 80 ஊழியர்களுக்கு ரூ.23.78 கோடி மதிப்பிலான பணப்பலன் காசோலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திறமைசாலி
கொரோனாவை அடுத்து தங்களுக்கு பணப்பலன்கள் கிடைக்குமா என ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தனது வாழ்நாளில் லட்சக்கணக்கான மக்களை பார்த்த ஒரே தொழிலாளி போக்குவரத்து தொழிலாளர்கள். நாட்டின் நாடி துடிப்பாக விளங்குபவர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கலாசாரங்களை தெரிந்து கொண்டு திறமைசாலிகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் திகழ்கின்றனர்.
அரசு வழங்கும் பணப்பலன்களை ஓய்வுபெற்ற பணியாளர்கள் நல்லமுறையில் பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் மேற்கு மாவட்ட பேரவை செயலாளரும், தொகுதி பொறுப்பாளருமான கிருஷ்ணராஜ், நகர செயலாளர் பாஸ்கர் ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் தேவதானம் குருசாமி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story