பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு


பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2021 1:28 AM GMT (Updated: 25 Jan 2021 1:28 AM GMT)

புதுவையில் பா.ஜ.க. வுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஆயத்த கூட்டம் தான் இது. நானும் அமைச்சர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினோம். அவர்கள் புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். ராகுல் காந்தி அடுத்த மாதம் (பிப்ரவரி) புதுவை வருவதாக கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு 3 முறை இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

புதுச்சேரியை பொறுத்தவரை தி.மு.க. நமது கூட்டணியில் தான் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. தி.மு.க. தலைவர்கள் புதுவை வந்து கூட்டத்தில் பேசுகையில் சில கருத்துகளை கூறியிருக்கிறார்கள். ஆனால் நம்மை பொறுத்தவரை கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தான் முடிவு செய்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம்.

பா.ஜ.க.விற்கு நம்மை எதிர்த்து போராட்டம் நடத்துவது தான் வேலை. அரசு சார்பில் நாங்கள் அனுப்பும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் கொடுப்பதில்லை. எனவே தான் தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் பா.ஜ.க. வினர் தேர்தல் அறிக்கையை தீ வைத்து கொளுத்துகின்றனர்.

இரட்டை வேடம் போடும் பா.ஜ.க.வின் ஜம்பம் புதுவை, தமிழகத்தில் பலிக்காது. அவர்களால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது. புதுவையில் பா.ஜ.க.வை கூண்டோடு அழிக்க வேண்டிய கடமை, பொறுப்பு நமக்கு உள்ளது.

நமது பிரசார குழுவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களை சந்தித்து அரசு சார்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், கவர்னர் அனுமதி வழங்காததால் செயல் படுத்த முடியாத திட்டங்கள் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.

கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருப்பது ஒரு வகையில் நமக்கு நல்லது தான். அவர் இருந்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. அதேபோல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற முடியும்.

புதுவையை பொறுத்தவரை தற்போதுள்ள சூழலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிக்கிறார்கள். அவர்களுடன் கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இனிமேல் நாம் தேர்தல் பணியை விரைவாக தொடங்க வேண்டும். பிரசாரத்துக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் ‌ஷாஜகான், கமலக்கண்ணன், கட்சியின் துணை தலைவர் பி.கே. தேவதாஸ், மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்களை கண்டு கொள்ளவில்லை. இந்த ஆட்சியில் கட்சிகாரர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று குற்றம்சாட்டினர். சிலர் நாங்கள் கட்சிக்காக இவ்வளவு நாட்கள் உழைத்துள்ளோம். எங்களுக்கு முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆவேசமாக கேட்டனர்.

இதனால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது. உடனே கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தி லிங்கம் எம்.பி. ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

Next Story