மேட்டூர் வலது கரை வாய்க்காலில், ரூ.65 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்; அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
மேட்டூர் கால்வாய்த்திட்டம் கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் வலதுகரை பிரதான கால்வாய் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் செல்லும் வகையில் வெட்டப்பட்டது.
இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு, 60 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் நீர்க்கசிவு அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்காலின் மேல்பகுதியில் பூதப்பாடியில் இருந்து கருங்கரடு வரையில் ரூ.31 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 315 மீட்டர் தொலைவுக்கும், கீழ்ப்பகுதியில் மயிலம்பாடி வரை ரூ.32 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 200 மீட்டர் தொலைவுக்கும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா, பூதப்பாடி ஊராட்சித் தலைவர் பி.ஜி.முனியப்பன், மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.கந்தசாமி, தொழில் அதிபர் கே.ஆர்.செல்வகுமார், சேலம் பொதுப்பணித்துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் நந்தகோபால், மேட்டூர் செயற்பொறியாளர் தேவராஜன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story