புஞ்சைபுளியம்பட்டியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு திருட முயற்சி
புஞ்சைபுளியம்பட்டியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு திருட முயற்சி நடந்து உள்ளது.
நகைக்கடை
புஞ்சைபுளியம்பட்டி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 60). இவர் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வணிக வளாகத்தில் நகைக்கடை வைத்து உள்ளார் கடையின் பின்புறம் நகராட்சி அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடத்துக்கு செல்வதற்காக கடையின் பின்புறம் லியாகத் அலி சென்று உள்ளார்.
அப்போது கடையின் பின்புற சுவரில் துளை போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
திருட முயற்சி
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையாவும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், ‘நேற்று முன்தினம் இரவு கடையின் பின்புற பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள சுவரை துளையிட்டு உள்ளனர். ஆனால் சுவரில் பாதி அளவே துளையிட்டு உள்ளனர். மீதி முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். மேலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் திருப்பி வைத்து திருட முயன்றதும்,’ தெரியவந்தது. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story