மீட்டர் ஆட்டோ இயக்க அனுமதி அளிக்க வேண்டும்- கலெக்டரிடம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை


மீட்டர் ஆட்டோ இயக்க அனுமதி அளிக்க வேண்டும்- கலெக்டரிடம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Jan 2021 7:26 AM IST (Updated: 26 Jan 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

மீட்டர் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஷேர் ஆட்டோ டிரைவர்கள்
கொரோனா பரவல் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

ஈரோடு நகரில் சுமார் 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களின் உரிமையாளர்கள் ஒரு நாளுக்கு ரூ.1,300 வரை வாடகை கேட்கிறார்கள். டீசல் செலவை ஆட்டோ டிரைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். டீசல் விலை உயர்வால் டிரைவர்களுக்கு தினமும் ரூ.500 கூட வருமானம் கிடைப்பதில்லை. இதனால் வாடகையை குறைக்க வேண்டும் என்று உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் வாடகையை குறைக்கவில்லை. இதனால் கடந்த 4 நாட்களாக ஈரோட்டில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களை போல ஈரோட்டிலும் மீட்டர் ஆட்டோக்களை இயக்க உரிமம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடை
செங்குந்தர் நகர் வீட்டுமனை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு சத்திரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை அமையும் பகுதியில் செங்குந்தர் நகர், கணபதி நகர், சி.எஸ்.நகர், அர்ஜூனா நகர், சேரன் நகர், டாக்டர் காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மேலும், ரேஷன் கடைகள், பள்ளிக்கூடங்கள், கோவில் ஆகியன உள்ளன. மதுக்கடை அமைந்தால் அமைதியற்ற சூழல் ஏற்படும். எனவே டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மீன் கடைகள்
பவானியை சேர்ந்த மீனவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பவானி நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் உள்ளோம். பவானி மற்றும் காவிரி ஆறுகளில் ஜிலேபி, லோகு, கட்லா, கல்பாஸ், கெழுத்தி, ராட்டு போன்ற மீன்களை பிடித்து விற்பனை செய்கிறோம். இந்த மீன்களை வெளியே வைத்து விற்கக்கூடாது என்றும், மீன் மார்க்கெட்டில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். மார்க்கெட்டில் மீன் விற்பனைக்கு முன்பு ஒரு கிலோவுக்கு ரூ.5 குத்தகைதாரருக்கு கட்டணமாக செலுத்தினோம். தற்போது ரூ.17 கேட்கிறார்கள். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மீனவர்களே பவானி பகுதியில் கடைகள் அமைத்து நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வீட்டுமனை பட்டா
அந்தியூர் முரளிகாலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலைக்கு செல்கிறோம். எங்களால் வீட்டு வாடகை கொடுக்க மிகவும் சிரமமாக உள்ளது. எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story