கிராமசபை கூட்டம் தோல்வி அடைந்ததால் தொகுதி வாரியாக மக்களை ஏமாற்ற மு.க.ஸ்டாலின் தயாராகி விட்டார்.- அமைச்சர் கடம்பூர் ராஜூ தாக்கு
கிராமசபை கூட்டம் தோல்வி அடைந்ததால், தொகுதி வாரியாக மக்களை ஏமாற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகி விட்டார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்பு தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருந்தது? என்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதியை பட்டப்பகலில் தி.மு.க.வினரே வெட்டிக்கொலை செய்தனர். தற்போது தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோதும், அக்கட்சியினர் பெரம்பலூரில் அழகுநிலையத்துக்கு சென்று மாமூல் கேட்டு பெண்ணை தாக்கினர். பின்னர் அவரிடம் சமரசம் பேசி, வழக்கை வாபஸ் பெற வைத்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு துணை முதல்-அமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது, ஏதேனும் ஒரு கிராமசபை கூட்டத்திலாவது பங்கேற்றாரா?. அவர் ஆட்சியில் இருந்தபோது மக்களை சந்தித்து குறைகளை கேட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
மக்களை ஏமாற்ற..
தற்போது தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களை நடத்தினார். இது தோல்வி அடைந்ததால்தான், இனி தொகுதிவாரியாக மக்களை ஏமாற்ற தயாராகி விட்டார். தி.மு.க.வினரை மக்கள் ஒருபோதும் நம்ப தயாராக இல்லை. தேர்தலுக்காக வேல் ஏந்தி வேடமிடுகிறவர்கள், கடவுளை ஏமாற்ற முடியாது.
அ.தி.மு.க. 3-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி. இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல, ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் என்ற மனநிலையில்தான் மக்களும் உள்ளனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் கிடைக்கப்பெற்ற பின்னர் தமிழகத்தில் அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வார்கள். கோவில்பட்டியில் ரூ.24 கோடியில் அரசினர் செவிலியர் கல்லூரி அமைக்க இன்னும் 2 வாரங்களில் அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
ஹாட்ரிக் வெற்றி
வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. மக்களின் ஏகோபத்திய ஆதரவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பகுதியில் பிரசாரத்தை முடித்த அவர், தெற்கு மாவட்ட பகுதியில் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளார்.
கடந்த 2011, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தி.மு.க.வினர் ஆட்சிக்கு வருவோம் என்று நினைத்து ஏமாந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களை ஏமாளியாக நினைத்தால், அவர்தான் ஏமாறுவார். அ.தி.மு.க. 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story