தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனா்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 11-வது தேசிய வாக்காளர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடந்த விழாவில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வாக்காளர்களாக தங்களை இணைத்துக்கொண்ட இளம் வாக்காளர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 103 வயதான மூத்த வாக்காளர் வள்ளியம்மைக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, பழங்கள் வழங்கப்பட்டது. தேசிய வாக்காளர் தின உறுதி மொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதேபோல் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவி குழுவினரின் ஊர்வலத்தை கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் அலுவலத்தில் நடந்த விழாவில், கலெக்டர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டு, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டியில், சிறந்த கோலத்திற்கான நினைவு பரிசும் வழங்கப்பட்டது. மேலும், வாக்காளர்களாக இணைத்து கொண்ட இளம் வாக்காளர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story