சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தை திருவிழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, அய்யா வாகனத்தில் பவனி வருதல், அன்னதர்மம் போன்றவை நடந்தது.
விழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, தொடர்ந்து பணிவிடை, காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளல் போன்றவை நடந்தன. மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் வைகுண்டசாமி வீற்றிருக்க காவி உடை தரித்து, தலைப்பாகை அணிந்த அய்யா வழி பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு பாலபிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுருள் படைத்து வழிபாடு
தேர் தலைமை பதி முன்பு இருந்து புறப்பட்டு கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ மற்றும் பழ வகைகளை சுருளாக வைத்து வழிபட்டனர்.
திருத்தேர் பணிவிடைகளை பையன் செல்ல வடிவு, பையன் நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வாகனத்தில் வலம் வருதல்
மாலையில் தேர் நிலைக்கு வந்தது. இரவு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் வீதி வலம் வருதலும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது .
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
Related Tags :
Next Story