மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு
மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
2 லிட்டர் மண்எண்ணெயுடன்...
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் போடுவதற்காக தனிப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எசனை கீழக்கரையை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி செல்லம்மாள்(வயது 70) என்பவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு கேனில் 2 லிட்டர் மண்எண்ணெய் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செல்லம்மாளை பிடித்து, அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்லம்மாளுக்கு செல்வராஜ் என்ற ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவர் இறந்து விட்டதால் செல்லம்மாள் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகன் செல்வராஜ், செல்லம்மாளிடம் இருந்து வீடு மற்றும் 2 ஏக்கர் விவசாய நிலத்தை கைப்பற்றியதோடு மட்டுமின்றி, 20 சென்ட் நிலத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு, கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் மனமுடைந்த செல்லம்மாள் மகனிடம் இருந்து அந்த 20 சென்ட் நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்ததாகவும், தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து செல்லம்மாள் கோரிக்கை தொடர்பாக மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டு சென்றார்.
கோட்டையை பாதுகாக்க கோரிக்கை
வி.களத்தூர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயலாளர் சித்திக் பாஷா கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பாதுகாக்கப்பட்ட புரதான சின்னத்தின் 200 மீட்டர் தூரத்திற்கு கட்டிட பணிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரஞ்சன்குடி கோட்டையின் முன்பு ஊராட்சி மன்றத்தின் மூலம் கட்டப்படவுள்ள கழிவறை மற்றும் கட்டிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து, மாற்று இடத்தில் கழிவறை, கட்டிடங்களை கட்டுவதற்கும், ரஞ்சன்குடி கோட்டையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
97 மனுக்கள்
பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 மனுக்களும், குன்னம் தாலுகாவில் 6 மனுக்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 2 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் ஒரு மனுவும், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் இருந்து 69 மனுக்களும் என மொத்தம் 97 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
Related Tags :
Next Story