நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவு;380 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் சரிவு;380 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 26 Jan 2021 9:01 AM IST (Updated: 26 Jan 2021 9:11 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு, 380 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 405 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-390, ஐதராபாத்-365, விஜயவாடா-396, மைசூரு-385, மும்பை-420, பெங்களூரு-385, கொல்கத்தா-470, டெல்லி-435.

முட்டைக்கோழி கிலோ ரூ.52-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.47 ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.64-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.1 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.65 ஆக உயர்ந்து உள்ளது.
தைப்பூசம்
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தைப்பூசம் வருவதால் தமிழகத்தில் முட்டை நுகர்வு குறைந்து உள்ளது. அதே நேரத்தில் விலை உயர்வு காரணமாக வடமாநிலங்களுக்கு முட்டை அனுப்புவதும் குறைந்ததால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அடைய தொடங்கி உள்ளன.
மேலும் 75 முதல் 80 வாரங்களில் விற்பனை செய்ய வேண்டிய வயது முதிர்ந்த கோழிகள் விற்பனை ஆகாமல் இருப்பதாலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காரணமாகவும் தினசரி 20 லட்சம் முட்டைகள் வரை உற்பத்தி அதிகரித்து உள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால் வெளி மாநிலங்களுக்கு செல்வது அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 45 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story