நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளையில் கைதான கொள்ளையர்கள், இன்று ஓசூர் அழைத்து வரப்படுகிறார்கள்;பஞ்சாப் போலீசாரும் விசாரணை நடத்த முடிவு


நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளையில் கைதான கொள்ளையர்கள், இன்று ஓசூர் அழைத்து வரப்படுகிறார்கள்;பஞ்சாப் போலீசாரும் விசாரணை நடத்த முடிவு
x
தினத்தந்தி 26 Jan 2021 3:41 AM GMT (Updated: 26 Jan 2021 3:46 AM GMT)

நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளையில் கைதான கொள்ளையர்கள் அனைவரும் இன்று ஓசூருக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்த பஞ்சாப் மாநில போலீசாரும் ஓசூருக்கு வருகிறார்கள்.

25 கிலோ நகை கொள்ளை
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 7 பேரை தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ தங்க நகைகள், 7 துப்பாக்கிகள், 97 தோட்டாக்கள், ஒரு லாரி, டாடா சுமோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த கொள்ளையர்களை அழைத்து வர கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசார் தெலுங்கானா மாநிலம் சைபராபாத் சென்றனர். அங்கு அந்த மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொள்ளையர்கள் 7 பேரையும் போலீசார் நேற்று மாலை அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஓசூருக்கு புறப்பட்டனர்.

இன்று வருகிறார்கள்
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கொள்ளையர்கள் 7 பேரும் ஓசூர் அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவர்களை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த ஓசூர் அட்கோ போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதில் 3 கொள்ளையர்கள் பிடிபட்ட நிலையில், தப்பிய கொள்ளையர்கள் தான் தற்போது ஓசூர் கொள்ளையில் பிடிபட்டுள்ளனர். இதனால் இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த, பஞ்சாப் மாநில போலீசார் ஓசூர் வருகிறார்கள்.

வெளி மாநில போலீசார் 
இதேபோல நாடு முழுவதும் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் நடந்த பெரிய கொள்ளைகளில் பதிவாகி உள்ள கொள்ளையர்களின் கைரேகைகள், தற்போது ஓசூர் கொள்ளையில் சிக்கி உள்ள கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒத்து போகிறதா?, என பார்ப்பதற்காகவும், வெளிமாநிலங்களை சேர்ந்த போலீசார் ஓசூர் வருகை தர உள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலை காவலில் எடுத்து விசாரணை நடத்தும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story