கரூர் மாவட்டத்தில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் தர்ணா-


முனியப்பன் கோவில் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா
x
முனியப்பன் கோவில் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா
தினத்தந்தி 26 Jan 2021 10:53 PM GMT (Updated: 26 Jan 2021 10:53 PM GMT)

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் தர்ணா-ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஈரோடு சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் இருந்து கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் வரை தேசிய கொடியுடன் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 ஆனால், ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் முனியப்பன் கோவில் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் தேசிய கொடியை கையில் பிடித்து கொண்டு சாலையில் படுத்து, சுமார் 1 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் டிராக்டர், இருசக்கர வாகனங்களை தவிர்த்து, அங்கிருந்து நடந்து கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் குளித்தலையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் அவரவர் கட்சி கொடிகளை கட்டிக் கொண்டு ஊர்வலம் செல்வதற்கு தயார் நிலையில் இருந்தனர். ஆனால், ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்காததால் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story